இந்தியாவிலும் உறுதியான ஒமிக்ரோன் வைரஸ்…

 இந்தியாவிலும் உறுதியான ஒமிக்ரோன் வைரஸ்…

பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரோன் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நவம்பர் இறுதி வாரத்தில் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு கண்டறியப்பட்டதாக தென் ஆப்ரிக்கா அறிவித்தது. அதன் பிறகு தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவின் பெங்களூருவுக்கு வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இருப்பினும், ஒமிக்ரோன் வைரஸ் பரவல் இந்தியாவில் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டு பயண தொடர்பு இல்லாதவர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இதன் மூலம் ஏற்கனவே ஒமிக்ரோன் இந்தியாவில் பரவிவிட்டதா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஒமிக்ரோன் மிக வேகமாக பரவும் என்று கூறப்பட்டாலும், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் சில வாரங்கள் சென்றால்தான் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது தெரியவரும். இந்த சூழலில் ஒமிக்ரான் பரவலைத் தடுக்க ஒட்டுமொத்த பயணங்களைத் தடை செய்வதற்கு பதில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரான் அச்சம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். சுய தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை அரசே சுய தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்தித் தங்க வைக்க வேண்டும்.

60 வயதைக் கடந்தவர்கள், அதனுடன் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள, உயிரிழப்பு நிகழ அதிக வாய்ப்புள்ள இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சிறிது காலத்துக்கு வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் உடனடியாக அவர்களுக்கு என்ன வகையான கொரோனா என்பதைக் கண்டறியும் ஆய்வை விரைவுபடுத்த வேண்டும்.

ஒரு விமான பயண நோயாளிக்கு கொரோனா தொற்று உறுதியானாலும் அவருடன் விமானத்தில் வந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைத்து கண்காணிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை இப்படி எல்லாம் கட்டுப்படுத்தி, கண்காணித்தால் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் பொது மக்கள் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, காய்ச்சல் – சளி என கொரோனா அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றைச் செய்வதன் மூலம் ஒமிக்ரோன் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

Udayasooriyan Editor

0 Reviews