இராகலை தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

 இராகலை தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

நுவரெலியா – இராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பதிவான தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர். ஜினதாச முன்னிலையில் நேற்று நண்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரான தங்கையா ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

சந்தேகநபர் பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்ததுடன் கொரோனா அபாயம் காரணமாக சந்தேகநபரை மன்றுக்கு அழைத்துவரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வலப்பனை நீதிமன்றத்தில் இருந்து பதுளை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபருடன் ஸ்கைப் ஊடாக நீதிபதி தொடர்புகொண்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் இராகலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். குறித்த தீ சம்பவம் குறித்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இராகலை பொலிஸாரினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடு ஒன்றில் கடந்த மாதம் 07 ஆம் திகதி இரவு தீ பரவியது. இதன்போது வீட்டிற்குள்ளிருந்த ஐவர் தீக்கிரையான நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Udayasooriyan Editor

0 Reviews