உலக அதிசயத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட காலி கோட்டை

 உலக அதிசயத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட காலி கோட்டை

போர்த்துக்கீசர்களின் கட்டிடகலைகளின் சிறப்புகளை கூறும் வகையில் இலங்கையில் ஏராளமான கோட்டைகள் உள்ளபோதும் இலங்கையின் தனிச்சிறப்பை உலகம் அறியச்செய்தது காலி கோட்டை என்றால் மிகையாகாது.

உலக அதிசயங்களுள் ஒன்றாக சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைசெய்யப்பட்ட நம் நாட்டின் கட்டிடம் என்பது இதன் இன்னொரு ஸ்பெஷல்.

இலங்கையின் தொன்மையானதும், தொல்பொருள் சின்னமானதுமான காலி கோட்டை போர்த்துக்கீசரினால் அமைக்கப்பட்டது. காலி நகரில் இருந்து 3.2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது பாதுகாப்பு அரணான காலிக்கோட்டை.

1588 ஆம் ஆண்டு அதாவது 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டு, பின்னர் ஒல்லாந்தரால் 1649 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் அரணாக மாற்றியமைக்கப்பட்டது. இது ஓர் கட்டிடவியல் மரபுரிமை நினைவுச்சின்னமாகும்.

இக்கோட்டைக்கு ஜனரஞ்சகமான ஓர் வரலாறும் உள்ளது. இந்த கோட்டைக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு விதமான பாதுகாப்பு உணர்வு தோன்றுவதால் போர்த்துக்கீசரின் கட்டிடக் கலைக்கு சபாஷ் என சொல்லத் தோன்றுகின்றது எனலாம்.

காலி கோட்டையை உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பயனளிக்கவில்லை. உலக அதிசயத்தில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் யுனெஸ்கோ நிறுவனத்தினால் இந்த கோட்டையை சிறப்பாக பேணுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் கோட்டையை சூழ பனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதுடன் இவற்றை சன்டா குரூஸ் என்ற பெயரில் போர்த்துக்கீசர்கள் அழைத்துள்ளனர். இதன் சுவர்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி பெலிசேட்ஸ் என்ற கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது, காலி கோட்டை தீவின் ஒரு ஓரத்தில் அமைந்திருந்தாலும் இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாகும்.

இலங்கைக்கு முதல் முதல் பலா மரம் அறிமுகம் ஆகிய காலமும் இக்கோட்டை கட்டப்பட்டதும் ஒரே காலம் என்றுதான் சொல்ல வேண்டும். போர்த்துக்கீசத்தில் இருந்து பலா மரம் கொண்டுவரப்பட்டு எக்கர்ஸ்லோட் பெஸ்டியன் என்பவரால் கோட்டை வாயிலின் இருமருங்கிலும் நடப்பட்டது. இப்படி நூற்றாண்டுகள் கண்ட பலா மரத்தை இன்றும் காணமுடியும்.

இதைத்தவிர பலா மரத்தை சுற்றி தென்னை மரங்களும் நீண்டு வளர்ந்துள்ளன. இந்த கோட்டை தொடர்பில் மேலைத்தேயர் கருத்து தெரிவித்தமை மட்டுமல்லாது பல வர்ணனைகளும் செய்துள்ளதை தவிர மேலைத்தேய இலக்கியங்களிலும் இக்கோட்டைபற்றிய தரவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் சென்று பார்வையிட வேண்டிய இடங்களுள் காலி கோட்டையும் ஒன்றாகும்

Udayasooriyan Editor

0 Reviews