கொழும்புல வேலை

 கொழும்புல வேலை

பேருந்தின் சாளரத்தின்
ஓரத்தில்…
வரமாய்
ஒரு இருக்கை…

சன்னலோர ஊதை
காற்று……
ஏதோ ஒரு போதை
தந்தாலும்…
மனது பாரமாய் இருந்தது…….

மலைகளுக்கு
விடைகொடுத்து
என் பயணத்திற்கு
விடையளிக்க………

“சொந்த மண்ணை விட்டு”
விடுகை பெறுகிறது
பேரூந்து………

உறக்கம் இல்லை
என்றாலும்……
விழிகள் உறக்கத்திற்கு
ஒத்திகை
பார்த்தது………….

“காலம் சூறாவளியாய்
சுற்றுகிறது….”
என்ன ஒரு வேகம்……

காலையில் அம்மாவின்
அந்த ஆனந்த
வார்த்தைகள்……….

“எம் மவே
கொழும்புல வேலை”

“கொழும்பு போறான்”

கேள்விகளே இன்றி
யாருக்கோ
விடையளித்துக்
கொண்டிருந்தாள்……..

இது என் முதல்
வேலை பயணம்…

ஏனோ …….
அவளுக்கு அதை
அக்கம் பக்கம்
கூறி வைப்பதில்
அத்தனை களிப்பு…….

சொந்த மண்ணை
விட்டு….
சொந்த நாட்டில்….
வேலைக்காய்…
அகதியாகிறேன்….

பள்ளி
படிப்பெல்லாம்
நன்று தான்…….

“ஒனக்கென்ன ராசா
நானிருக்கே…
ஒம் படிப்புக்கு என்ன கஸ்டோ…”

எம் பெற்றோரின்
இந்த ஒற்றை மகிழ்ச்சி
வார்த்தையில்
தான்….

அவர்களின்..
கண்ணீர்
நதியை ஒவ்வொரு
மகன்களும்
காண்கிறார்கள்……..

அந்த வலியை கூறிவிட
என் கவிக்கொண்ட
அகராதியில்
இடம் இல்லை……….

அவர்களின்
கஷ்டத்திற்கு
சாயம் பூசி எம்மிடம்
அழகாய் தெரிய
பார்க்கிறார்கள்………

பாவம்..
பிள்ளைகளிடம்
அது பொய்த்து
விடுகிறது………….

தாம்..
கண்ணீரில்
மிதந்தாலும்…
நாம்..
பன்னீரில்
குளிக்க வேண்டும்.
என்பதில்…..
எம்
பெற்றோர்
கவனம் கொள்வர்…..

என் நிலையும்
அப்படித்தான்…..

உயர்தரம் முடித்து விட்டு
உழைக்க சென்றேன்…
கொழும்புக்கு…….

வாழ்த்தி அனுப்பினார்கள்
வாழ செல்கிறான்
என்று………

ஆனால்…
அங்கு…

எல்லாம் அந்நியமாய்
இருந்தது……
யார் செய்த
புண்ணியமோ…
வேலை கிடைத்தது……

பல சரக்கு
கடையொன்றில்
வேலை………

என்னை
விட்டு விட்டு
விடை பெற்றார்
“தரகர் மாமா…….”

பச்சை தாளொன்றை
சட்டைப்பையில்
வைத்து விட்டார்
என் “முதலாளி….”

“என்னை
விற்றுவிட்டு
சென்றாரோ..?

விற்பனையானேனோ?

என
எனக்குள்
ஓர் எண்ணம்…….

“நெஞ்சம் லேசாய் கனத்தது…..”

“…………‌‌கண் விழித்தேன்”
பேருந்து வரகாபொல
சந்தியில் தரித்தது………

அசதியில்…
மீண்டும்
விழி மூடினேன்…
விம்பங்கள்
தொடர்கின்றன……..

மொத்தமாய்
பத்துப்பேர்…….

“மலை நின்றாலும்
தூரல்
விட்டப்பாடில்லை….”

இங்கும் தொடர்கிறது…
என் மலையக
சொந்தங்கள்…….

“ஹட்டன்..
பொகவந்தலா
ராகல..வென
நான் அங்கு
ரம்பொடை”ஆனேன்

“ஒற்றை கயிற்றை
அத்து விட்ட
ஊசலாய்…”
தடுமாறினேன்……..

“இந்த கயிறறுந்த
கைகள் கொஞ்சம்
எனக்கு கயிராகின…”

இதுதானோ
நாம் கொண்ட
“தொப்புள் கொடி உறவு……”

பூரித்து போகிறது
உள்ளம்…….

“பரோட்டா”….அதோடு
சேர்த்து..
ஏதோ ஒரு “குழம்பு”
குழப்பி அடிக்கிறோம்……

முதுகு மூட்டை
சுமக்கிறது…
முட்டி அழுகிறது……

“தேயிலை மலையில்
தான்..பட்ட
கஸ்டத்தை
நீ பட வேண்டாமென..”

எனை
அனுப்பி வைத்தாள்
என் தாய்……

தொடர் குறியாய்
தொடர்கிறது
அது என்னையும்……..

“இங்கு சொல்லி அழ
ஆளுமில்லை….”
“அழுதும்
ஆவது
ஏதுமில்லை……..”

நேரத்திற்கு
உணவு கிடைக்கிறது
இருந்தும்
பசிக்கவில்லை……..

பஞ்சு மெத்தை
இருக்கிறது….
தூக்கம் வர
மறுக்கிறது………

“பொங்கலையும்”
“தீபாவளியயும்”
விரைவில்
வர சொல்லி
மனம்
விம்முகிறது……..

கடல்கரைக்கு
சென்றேன்……
கவிதை வர
மறுக்கிறது…..

எம்மூர் ஓடைத்தண்ணீர்
அழகிற்கு
இங்கு யாவும்
தோற்கிறது…………

எத்தனையோ
உயிர்களுக்கு
உணவாகிறது
எம் பெற்றோரின்
உழைப்பு……..

“நாம் இங்கு
யாருக்கோ
உரமாகிறோம்………”

காணாத காட்சி
எல்லாம்
இங்கு கண்டாலும்…

“மனம்…
மலைநாட்டில்
மோகம் கொள்கிறது…..”

மோகம் கொண்டு
என்ன பயன்…

“அங்கு நிலை கொள்ளும்
மேகமே
சோகமானது தானே…….”

அம்மாவுக்கு
“புதுச்சேலை”
அப்பாவுக்குபச்சை
நிற
சாரம் இரண்டு……..”

அப்பில் ஆரஞ்சு
என…
“நட்சத்திர தடம்
பதித்த…
அழகிய…
சட்டையுடன்…”
நேற்றைக்கு
முதல் நாள் தான்
வீடு வந்தேன்……….

அன்று என்
பெற்றோர்
தன்
கஸ்டம் மறைக்க
என்னிடம்
வேசமிட்டாரர்கள்…….

“இன்று
நான் நலமாய்
உள்ளேனென அவர்களிடம்
வேசமிடுகிறேன்…”

“காலம் மாறியது
காட்சிகள்
மாறவில்லை…..”

அம்மாவின்
“ஆர்பரிப்பு”
அப்பாவின்..
“மெய்சிலிர்ப்பு”
தம்பியின் “குதுகளிப்பு…..”

இத்தனையும்
பார்க்கையில்
பட்ட பாட்டெல்லாம்
“சிட்டாய் பறக்கிறது…..”

இவை எல்லாம்
பொய்யென்று
என்னுகையில்…

“ஆழ் மனம்
வலிக்கிறது…..”

“கொழும்பு.. கொழும்பு”
என்ற கூச்சல்
சத்தம் காதை
பிய்க்கிறது…….

கொழும்பு வந்து
சேர்ந்து விட்டேன்…….
வீட்டை பிரிந்து வந்து
விட்டேன்………

ஆனால் அம்மாவின்
சத்தம் மட்டும்
காதில் ஒலிக்கிறது……

“எம் மவே கொழும்புல வேலை”

“மீண்டும் ஒரு
விழாவை பார்த்து
காத்திருக்கிறேன்………

(என் நெஞ்சம் கொண்ட ஈரம்)

எம்.ராமதாஸ்
இறம்பொடை

Udayasooriyan Editor

0 Reviews