“தனூஷ், ஸ்ரீதேவி வந்து நடனமாடியதால் எங்கள் ஊர் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது” பூண்டுலோயா டன்சினன் மக்கள் மகிழ்ச்சி

 “தனூஷ், ஸ்ரீதேவி வந்து நடனமாடியதால் எங்கள் ஊர் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது” பூண்டுலோயா டன்சினன் மக்கள் மகிழ்ச்சி

“தூவானம் மெல்ல தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன் …” இந்த பாட்டை தூவானகங்கை வழியே செல்பவர்கள் முனுமுனுத்துக் கொண்டே செல்லும் வழக்கிற்கு வந்துள்ளது.காரணம் அந்நீர்வீழ்ச்சியின் பெயர் தூவானகங்கை என்பதால்.

பூண்டுலோயா என்றால் அக்கம் பக்கம் ஊர் உட்பட வெளிமாவட்ட ஊர்களிலும் பேசும் இடமாக தூவானகங்கை அமைந்துள்ளது. அழகிய சூழலில் ரம்மியமான இடத்தில் பார்ப்பவர் கண்களை கொள்ளைக்கொள்ளும் இடமாக இவ்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்நீர்வீழ்ச்சி 100 மீற்றர் உயரத்தில் பூண்டுலோயிவிலிருந்து நுவரெலியா செல்லும் வீதியில் டன்சினன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி இலங்கை உட்பட இந்தியாவிலிருந்து கூட்டம் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப்பயணிகளும் திரைப்படத்துறையினர், தொலைக்காட்சி துறையினர் என அடிக்கடி வந்து செல்கின்றனர்.

2004ஆம் ஆண்டு தனுஷ்,ஸ்ரீதேவி நடிப்பில் உருவான தேவதையை கண்டேன் திரைப்படத்தின் “அழகே பிரம்மனிடம் மனுக்கொடுக்க போயிருந்தேன்…” எனும் பாடலில் இந்நீவீழ்ச்சி உள்ளடக்கப்பட்டுள்ளது.அதேபோல சன்டீவியின் தெய்வ தரிசன நிகழ்ச்சியிலும் இந்நீர்வீழ்ச்சி உள்வாங்கப்பட்டுள்ளது. இதை தவிர இலங்கை திரைப்படங்களான ஹினி அவுல, சீதல அத்துவிச்சே கிந்தர, கங்கே பிஹ, ஜுலியட்கே பூமிகாவ போன்ற திரைப்படங்களிலும் இந்நீர்வீழ்ச்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நீர்வீழ்ச்சியோடு கோவிலொன்றும் இணைந்தே காணப்படுகின்றது. அக்கோவிலின் பெயர் ஸ்ரீ மீனாட்சி சிவாலயம். இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர். இக்கோவில், நீர்வீழ்ச்சி தொடர்பாக இக்கோவிலில் பூசகராக கடைமையாற்றும் ஆண்டி சண்முகம் சுவாமியார் பின்வருமாறு குறிப்பிட்டார்.

அதாவது இந்நீர்வீழ்ச்சியை காணவரும் அனைவரும் கோயில் தரிசனத்தையும் மேற்கொண்டே செல்வர்.கோயிலும் நீர்வீழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இக்கோவில் மிக சக்திவாய்ந்ததொன்றாகும் காரணம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாகவும் கூறினார்.

மேலும் கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு நபர் அர்ச்சகர் உருவில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அர்ச்சகரான ஆண்டி சண்முகம் சுவாமியார் கூறினார்.

இந்நீர்வீழ்ச்சி தொடர்பாக டன்சினன் பகுதியை சேர்ந்த திருநாட்செல்வம் என்வர் குறிப்பிடுகின்ற போது உண்மையில் மன நிம்மதியை ஈந்நீர்வீழ்ச்சி தருகின்றது. மனதில் கஸ்டங்கள் ,மனக்குழப்பம் போன்ற சமயங்களில் இந்நீர்வீழ்சி அருகில் சென்று பார்வையிட்டால் மன நிம்மதி கிடைக்குமென கூறுகின்றார். அதனால் கஸ்டமான சூழ்நிலையில் இந்நீர்வீழ்ச்சிக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஓட்ட வீரரான விஜிந்த் என்பவர் குறிப்பிடுகின்ற போது என்னை இலங்கை முழுவதையும் அறியவைத்த பெருமை இந்நீர்வீழ்சிக்கும் உண்டு காரணம் நான் ஓட்ட வீரனாக மாறுவேனா என யோசித்த சமயம் இந்நீர்வீழ்ச்சிக்கு வந்து யோசித்து கோயிலையும் தரிசனம் செய்த பிறகே எனக்கு மனத்தெளிவு பிறந்து இன்று மலையகம் உட்பட முழு இலங்கையுமே அறியும் வண்ணம் ஓட்ட வீரனாக மாறியுள்ளேன் என குறிப்பிட்டார்.

இங்குவரும் சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவர்ந்திழுக்கும் தன்மை இந்நீந்நீர்வீழ்ச்சிக்கு உண்டு. அதனால் வருடம் முழுவதும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக வெகுவாக காணப்படுகின்றது. நாமும் ஒருதடவை தூவான கங்கை எனும் டன்சினன் நீர்வீழ்சியின் அழகை ரசித்து விட்டு தான் வருவோமே!

நீலமேகம் பிரசாந்த்

Udayasooriyan Editor

0 Reviews