திராவிடர் ஆண்டபோதும் தமிழர் தனித்துவம் இல்லாத யாப்பகூவ

 திராவிடர் ஆண்டபோதும் தமிழர் தனித்துவம் இல்லாத யாப்பகூவ

இலங்கை மீது அந்நியரின் பார்வைப் பட நம்நாட்டின் இயற்கை வளம் மட்டுமல்ல இலங்கையின் கலை அம்சங்களும் கூட நிச்சயம் ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.

இலங்கை மன்னர்கள் தான் வாழும் இடத்தை பாதுகாப்பு அரணாக அமைத்துக்கொள்வதில் செலுத்திய அக்கறைக்கு நிகராக நம் நாட்டிற்கே உரித்தான கலை அம்சங்களைக்கொண்டு அரண்மனைகளை அலங்கரிக்கவும் தவறவில்லை. அதற்கு இலங்கையின் புராதன சின்னங்களாக விளங்கும் அரண மனைகளே சாட்சி! அந்த வகையில் ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படும் இடமாக திகழ்கிறது யாப்பகூவ அரண்மனை.

இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் யாப்பகூவ மலையில் கம்பீரத்தோற்றத்தோடு காட்சிதருகிறது யாப்பகூவ இராசதானி.

கிட்டத்தட்ட 300 மீற்றர் உயரமான மலையில் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் நீண்ட படிக்கட்டுக்களுடன் ஆரம்பமாகிறது பாரிய அரண்மனை.

தம்பதெனிய இராசதானிக்குப் பின்னர் இலங்கையில் உருவான இராசதானி இதுவாகும். 1273 இல் முதலாம் புவனேகபாகு மன்னனால் இந்த மாளிகைகளும், யாப்பகூவ கோட்டைக் கட்டிடங்களும் கட்டப்பட்டன. தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எதிரிகள் தன்னை இலகுவில் நெருங்க முடியாத அளவிற்கும் இயற்கை காடுகளின் நடுவே மிக சாணக்கயத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.

முதலாம் புவனேகபாகு மன்னனின் இறப்பின் பின்னர் பாண்டியத் தளபதியான மாறவர்மன் குலசேகரன் இந்த இராச்சியத்தை ஆக்கிரமித்தான். இங்கு வைக்கப்பட்டிருந்த புத்தரின் தந்தத்தாதுவை பாண்டிய தேசத்திற்குக் கொண்டு சென்றான் மாறவர்மன்.

இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த தந்தத்தாதுவை யாப்பகூவ இராசதானியின் இரண்டாவது அரசனாக வந்த மூன்றாம் பராக்கிரமபாகுவின் நட்பின் மூலமாக மீட்டதாக சரித்திரம் சொல்கிறது.

அரசர்கள் பலரின் கைகளுக்கு மாறிய இவ் இராசதானி பல திராவிட மன்னர்களின் பராமரிப்பிலும் புனரமைப்புகளிலும் கூட இருந்துள்ளது. ஆனால் யாப்பகூவ இராசதானியில் தமிழர்களின் எவ்வித கலைப்படைப்புக்களும் இங்கு இல்லை என்பது கவலைக்குரியதே.

கலை நயம்மிக்க யாப்பகூவ அரண்மனையைச் சுற்றி 300 அடி உயரமான அரண்கள் கட்டப்பட்டுள்ளன. ஆழகிய நீர் தடாகங்களும் ஆங்காங்கே சேறு நிரப்பப்பட்ட குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கருங்கற் சிற்பங்கள் 18ஆம் நூற்றாண்டிற்குரியவை.

விகாரை ஒன்றும் அதன் வட கிழக்கில் குகை ஒன்றும் அதில் புத்தர் சிலையும் உள்ளதோடு அருகே உள்ள சிறு விகாரையில் விஷ்ணு உட்பட ஏனைய தெய்வங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன.
இதன் கூரையில் சத்சதிய எனப்படும் புத்தரின் சரிதம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதன் வலது சுவரில் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையான கட்டங்களை ஓவியமாக வரைந்துள்ளனர். இடது பக்க சுவரில் வெஸ்ஸந்தரா ஜாதகக் கதை எனப்படும் பௌத்தர்களின் வரலாற்றுக் கதைகள் வரையப்பட்டுள்ளன. பரதுக்கதுக்கித்த என்றழைக்கப்படும் பிறரின் துன்பங்களுள் பங்குகொள்ளல் என்ற செய்தியை வெளிப்படுத்தும் இரண்டு புத்தரின் உருவங்களும் வரையப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள மகர தோரண செதுக்கல்களிலும் இங்குள்ள மகரதோரணமே பிரசித்தி பெற்று விளங்குகிறது. அரச மாளிகையின் வரவேற்பு மண்டபத்தை அடையவேண்டுமானால் முப்பத்தைந்து படிகளைக் கடக்கவேண்டும்.

திராவிடருடன் தொடர்புடைய இவ் இராசதானி நாம் நிச்சயம் சென்று பார்வையிடவேண்டிய ஓர் இடமாகும்.

Udayasooriyan Editor

0 Reviews