பலா மரத்தின் காய்களை கொடுத்து பக்கத்து ஊர் மக்களின் பசியைத் தீர்த்த கோணக்கலை காவத்தை தோட்டமக்கள்!!

இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா (1970 – 1977) பிரதமராக இருந்த காலத்தில், வெளிநாட்டுப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மூடிய பொருளாதார கொள்கையினை அமுல்படுத்தினார். அது மக்களைப் பாதிக்காத வகையில் நடைமுறைப் படுத்தாததால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்களை மிகவும் வருத்தியது.
இந்தக் காலத்தில் மலையக மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலா, வற்றாளை, மரவள்ளி, வாழை என்பன இவர்களுக்கு கை கொடுத்தது.
இப்படியான ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தாம் வாழும் பிரதேசத்தில் உள்ள பலா மரத்தின் காய்களை கொடுத்து பக்கத்து ஊர் மக்களின் பசியைத் தீர்த்தவர்கள்தான் கோணக்கலை காவத்தை தோட்டமக்கள்.
மலைத்தொடர்களுக்கிடையே பலா மரச்சோலையை தன்னகத்தே கொண்ட பசுமை நிறைந்த பூமியாக காட்சியளிக்கிறது கோணக்கலை காவத்தை.
இத்தோட்டத்திற்கு செல்லும் பாதையின் ஆரம்பம் முதல் தோட்டத்தின் மக்கள் குடியிருப்புகள் வரை தொடராக ஓங்கி வளர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான பலாமரங்களே இவ்வூருக்கு தனியழகு.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து வந்த எமது மூத்த தலைமுறையினரால் இப்பலாக் கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பஞ்ச நிலைமைகளின் போது இத்தோட்ட மக்களினதும், அயல்கிராம மக்களினதும் பசி தீர்க்க இங்குள்ள பலாமரங்களே உதவியுள்ளன. அது மட்டுமின்றி இன்றும் பலரின் பசி தீர்க்கின்றது இங்குள்ள பலா மரங்கள்.
மரம் நடுகையின் பலன் தலைமுறைகளைத் தாண்டி நன்மை பயக்கும் என்பதற்கு இவ்வூர் சிறந்ததோர் உதாரணமாகும்.
நடராஜா மலர்வேந்தன்