பாம்புகள் நிறைந்த உணுகலை தோட்டம்

 பாம்புகள் நிறைந்த உணுகலை தோட்டம்

பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால் உணுகலை தோட்ட மக்களோ பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லை. தோட்டமெங்கும் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் நிறைந்திருக்கின்றன.

வழமையாக குளிர் நிறைந்த மலையக தோட்டப்புறங்களில் பாம்புகளை காண்பது அரிது. சில தோட்டங்களில் பாம்புகள் தென்படும். ஆனால் பாம்புகளும் பாம்பு புற்றுகளும் அதிகம் இருக்கும் அச்சம் உண்டு பண்ணும் உணுகலை தோட்டம் பற்றி இந்தவாரம் பார்ப்போம்.

பதுளை ஹாலிஎல நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப் பெற்ற அழகிய ஊர் தான் உணுகலை தோட்டம். ஹாலி எல புகையிரத நிலையத்தின் ஊடாக செல்லும் இத்தோட்டத்தின் ஆரம்பத்திலேயே கண்களில் படுவது பாம்பு புற்றுக்கள் தான். ஏறத்தாழ 200இற்கும் மேற்பட்ட புற்றுகள் இத்தோட்டத்தில் காணப்படுகின்றன. தேயிலை மலைகளில் மட்டுமல்ல வீடுகளுக்கருகில் கூட இவ்வாறான புற்றுகள் காணடுகின்றன.

இவ்வாறு புற்றுகள், பாம்புகளைக் கண்டு ஊர் மக்கள் அஞ்வது கிடையாது. அதுமட்டுமல்ல புற்றுகளுக்கு அருகிலேயே வேப்ப மரங்களை நாட்டி புற்றுகளை அம்மனாக பாவித்து வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் வைப்பவர்கள் புற்றுகளுக்கு பால் வார்த்து வழிபடும் முறையும் இங்கு காணப்படுகிறது.

தேயிலை மலைகளில் அதிகமான பாம்பு புற்றுகள் காணப்படுகின்ற போதும் அச்சம் கொள்ளாது மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்கின்றனர்.

”எங்கள் ஊரில் பாம்புகளும் மக்களோடு வாழ பழகிக்கொண்டது. இவ்வாறான புற்றுகள் உருவாக காரணம் இத்தோட்டத்தின் மென்மையான மண்வளம் தான். ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட புற்றுகள் காணப்படுகின்றன” என்கிறார் ஊர்வாசியான நிஷாந்தன்.

இத் தோட்டத்திலேயே பதுளையின் பிரபல அரசியல்வாதியான வடிவேல் சுரேஷின் இல்லமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தோட்டத்தை பொருத்தளவில் மற்றொரு சிறப்பு மிளகு பயிர்ச்செய்கை தான். தோட்டங்கள் காடாக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற இக்காலக்கட்டத்தில் இத்தோட்டம் காடாகிவிட கூடாது என்பதற்காக தேயிலை செடிகளுக்கு இடையே காணப்படும் மரங்களில் மிளகு பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மிளகு அறுவடையினை பெருந்தோட்டத் தொழிலாளர்களே மேற்கொள்வதோடு அதற்கான சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது ஏனைய தோட்டங்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளதோடு இத்தோட்ட சிறப்பாகவும் ஊர்மக்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

உணுகலை தோட்டத்தில் பண்டைகாலம் தொடக்கம் இன்றுவரை யாகம் வளர்க்கும் வழமை ஒன்று காணப்படுகின்றது. ஆண்டு தோறும் குறித்த நாளில் இவ்வூரில் யாக பூஜை நடத்தப்படுவதோடு யாகத்திற்கான பொருட்கள் கோவில் வளாகத்திலேயே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

யாகம் வளர்ப்பதற்கான அனைத்து மரங்களும் ஆலயத்தின் அருகிலேயே காணப்படுகின்றன. ஏன் சந்தன மரம் கூட காணப்படுகின்றது என்கிறார்கள் ஊர் மக்கள்.

இத்தோட்டத்தில் ஊவா பிளாண்டர்ஸ் கிளப் என்றொரு இடம் காணப்படுகின்றது. தோட்ட தொழிற்சாலையாக காணப்பட்ட இவ்விடத்தை வெள்ளையர்கள் விளையாட்டு அரங்காக மாற்றியமைத்துள்ளனர். இவ் கிளப்பில் விளையாடுவதற்கான அனைத்து வசதிகள் காணப்படுவதோடு, இத்தோட்டத்தின் வரலாற்று தகவல்களை சுமந்த ஓர் பொக்கிஷமாகவும் இது காணப்படுகின்றது. மேலும், ஆரம்ப காலத்தில் மாட்டுவண்டி பயணம், வெள்ளைக்கார துரைமார்கள் குதிரை வண்டியில் பயணித்தமை போன்றவைக்கான ஆதார படங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளே இங்கு வருகைத்தருவதோடு இக் கிளப் 1938ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தோட்டத்தில் ஒவ்வொரு லயன் குடியிருப்புக்களுக்கும் ஒவ்வொரு பெயரை சூட்டி இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். மிக சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இப்பெயர்கள் அமைந்துள்ளன. கூரைகளுக்கு ஓடு இடப்பட்டுள்ளதால் ஓட்டு லயம், அதிகமாக சண்டைகள் வருவதால் குழப்பம்பட்டி லயம், 4 அறைகளை கொண்டதால் நாலாம் காம்புரா லயம், புற்கள் அதிகம் காணப்படுவதால் புல்லுமேல் லயம், ஆலமரம் காணப்படுவதால் ஆலமர லயம் என பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர்.

இத்தோட்டத்தில் ஆரம்ப காலப்பகுதியில் ஆணைக்கொய்யா செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணைக் கொய்யாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் பாம்புகள் அதிகம் காணப்படுவதால் மரங்களை பராமரிப்பில் சிக்கல்கள் ஏற்பட அப்பயிர்ச்செய்கை கைவிடப்பட்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகமான கிணறுகள் இத்தோட்டத்தில் காணப்படுகின்றன. எனவே நீர் பிரச்சினை இத்தோட்டத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. அனைத்து வீடுகளிலும் இக்கிணறு காணப்படுகின்றன. குடும்பத்தலைவரின் பெயரை வீட்டின் கிணற்றுக்கும் சொல்லி அழைக்கும் வழக்கத்தை இவ்வூர் மக்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு பல சிறப்புக்களை உள்ளடக்கி ஹாலிஎல உணுகலை தோட்டம் விளங்குகின்றது.

நீலமேகம் பிரசாந்த்

Udayasooriyan Editor

0 Reviews