மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்

 மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்

ன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது.

சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா பிந்து அறிவித்தார். இதற்கு முன்பு இதுபோன்ற திருமணத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிப் பார்த்து அவ்வாறு யாரும் செய்துகொள்ளவில்லை என்பதையும் அவர் அறிந்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது திருமணத்தை செய்ய விரும்பினார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

ஜூன் 11 ம் திகதி அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் முடிவு செய்திருந்தார். எனினும், அக்கம்பக்கத்து வீட்டாரின் எதிர்ப்பால் திருமணத்தை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துவிட்டார். மேலும் வேறு வகையில் பிரச்சினைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர் திருமணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்திருக்கிறார்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள கோத்ரி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவரது திருமணம் நேற்று நடைபெற்றது. மொத்தம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்ச்சியில் அவரது தோழிகளும், அலுவலக சகாக்களும் கலந்து கொண்டனர்.

தனக்குத்தானே நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்ட ஷாமா பிந்து, திருமணம் நடந்ததற்கான அடையாளமாக திருமாங்கல்யத்தையும் அவரே கழுத்தில் கட்டிக் கொண்டார்.

மணமகன் இல்லாமல் இந்தத் திருமணம் இனிதே நிறைவு பெற்றது. இந்தியாவில் இதுபோன்ற ஒரு திருமணம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில், “இந்தத் திருமணத்தை கோயிலில் நடத்தலாம் என்று விரும்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக திருமணம் நடைபெற்ற இடத்தை மாற்றிவிட்டேன். எனது வாழ்க்கையில் என்னை நானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள 7 வாக்குறுதிகளை திருமணத்தின்போது படித்தேன்” என்றார் ஷாமா பிந்து.

Udayasooriyan Editor

0 Reviews