முக அமைப்பு ஏற்ற வகையில் பொட்டு தெரிவு செய்வது எப்படி?

 முக அமைப்பு ஏற்ற வகையில் பொட்டு தெரிவு செய்வது எப்படி?

பொட்டு, முகத்திற்கு முழு அழகைத் தருகிறது. எவ்வளவு சிறப்பாக ‘மேக்கப்’ போட்டிருந்தாலும், விலை உயர்ந்த புடவையை உடுத்தியிருந்தாலும், ஆபரணங்களை அடுக்கி அணிந்திருந்தாலும் நெற்றியில் ஒரு பொட்டு வைக்காவிட்டால் போதும் அழகு இரட்டிப்பாகும்.

இன்றைய பெண்கள் தங்கள் முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பொட்டு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முக்கியமாக முகத்தின் அமைப்பை கருத்தில்கொண்டு அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் பொட்டு அமையவேண்டும். பொதுவாக இயல்பான பொட்டுகளே முகத்திற்கு கூடுதல் அழகு தரும்.

சிலருக்கு பொட்டு ஒவ்வாமை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்களும் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஐலைனரும், ஐபென்சிலும் இப்போது பல நிறங்களில் கிடைக்கின்றன. உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப அவைகளை பயன்படுத்தி பொட்டுகளை வரைந்துகொள்கிறார்கள்.

சதுர வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக நீளமில்லாத, சற்று அகலமுள்ள பொட்டு கூடுதல் அழகு தரும். நீளமான, அகலம் குறைந்த பொட்டுகள் அவர்களது முகத்திற்கு எடுப்பாக இருக்காது. வட்டமான பொட்டுகளே அவர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும்.

உருண்டையான முக அமைப்பு கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் ஏற்றது. உருண்டை முகத்திற்கு இது வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தும். சுருங்கிய நெற்றி அமைப்பு கொண்ட பெண்கள் புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைக்கவேண்டும்.

முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு எல்லாவிதமான பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். விசாலமான நெற்றி அமைந்தவர்களுக்கு நீளமான பொட்டுகள் கூடுதல் அழகு தரும். முக்கோண வடிவ பொட்டுகளும் பொருந்தும். விசாலமான நெற்றியை கொண்டவர்கள் புருவங்களில் இருந்து ஒரு செ.மீ. உயரத்திற்கு மேல் பொட்டுவைப்பது நல்லது.

இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் பொருந்தும். முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டுவைக்கும்போது அது சரும நிறத்திற்கும் பொருந்தும் விதத்தில் இருக்கிறதா என்றும் கவனிக்கவேண்டும். உடுத்தும் உடையின் நிறத்திற்கும், பொட்டின் நிறத்திற்கும் பொருத்தம் இருக்கவேண்டும்.

பொட்டு முகத்திற்கு கூடுதல் பொலிவு தருவதால் அதற்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

Udayasooriyan Editor

0 Reviews