முளைகட்டிய தானியங்களை சாப்பிடச் சொல்வது ஏன்?

 முளைகட்டிய தானியங்களை சாப்பிடச் சொல்வது ஏன்?

இயற்கை மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் முளைகட்டிய தானியங்களை சாப்பிட சொல்வது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அவற்றில் என்ன ஸ்பெஷல்? எப்படி சாப்பிட வேண்டும்? நாமே தயார் செய்ய முடியுமா? எல்லா சந்தேகங்களுக்கும் இங்கே பதில் உண்டு.

முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்கிறோம்.

முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

அதனால் இந்த பயறு வகைகளை முளைகட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளில் சிட்ரஸ் அமிலம் (Citrus Acid) என்று சொல்லக்கூடிய விற்றமின் சி மற்றும் ஈ சத்துக்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் செறிவாகக் காணப்படுகிறது.

மேலும் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

இளைஞர்களுக்கு அவசியம்

இளைஞர்கள் கட்டாயம் முளை கட்டிய தானிய வகை ஏதாவது ஒன்றினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது அவர்கள் விரும்பும் உடல் ஆரோக்கியத்தையும் கட்டுமஸ்தான உடலையும் தரும்.

குழந்தைகளுக்கு அத்தியாவசியம்

இன்றைய சூழலில் குழந்தைகளின் திண்பண்டங்கள் ரசாயனங்கள் நிறைந்தவையாக இருக்கிறது. நேரடியாக எண்ணெயில் பொரித்த உணவுகள், சிப்ஸ் வகைகள், பிஸ்கட் வகை உணவுகள், சாக்லெட் வகை உணவுகள், செயற்கை நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகள் என இதுபோன்ற திண்பண்டங்களை குழந்தைகள் தின்று, வளரும்போதே தங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

அதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அதனால் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் முளைகட்டிய தானியங்களை நன்றாக வேக வைத்து தினமும் 30 முதல் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் தரலாம்.

இதனால் உடல் உறுதி, உடல் சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு, மனத்தெளிவு போன்றவற்றுடன் அவர்களின் இளம் வயதிலயே உடல் எடை கூடாமல் இருக்கும் வண்ணமும் பார்த்துக் கொள்ள முடியும். முக்கியமாக கூந்தல் வளர்ச்சி, தோலுக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய தானியங்கள் செய்கின்றன. வீட்டிலேயே செய்யக்கூடிய ஓர் எளிய ஆரோக்கியமான உணவும் கூட.

Udayasooriyan Editor

0 Reviews