ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

 ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிராக பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (37) மீது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயார்கோ என்ற பெண் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகருக்கு வந்திருந்த ரொனால்டோ ஹோட்டல் அறையில் தன்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு லொஸ் வேகாஸ் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை ரொனால்டோ மறுத்து வந்தார். வழக்கு விசாரணையின்போது, ஒருகட்டத்தில் தனக்கு 3,75,000 டொலர் தந்தால் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக கேத்ரின் கூறினார். ஆனால் இதற்கு ரொனால்டோ ஒப்புக்கொள்ளவில்லை.

இருதரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜெனிஃபர் டோர்சி கூறியதாவது:
இந்த வழக்கின் தொடக்கம் முதலாகவே மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களையே அளித்து வந்தனர். அதுமட்டுமின்றி, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தொடர்புடைய இரகசிய ஆவணங்களையும் அவர்கள் பெற்று வந்துள்ளனர். மேலும், இந்த வழக்கை இன்னும் தீவிரமாக மாற்றுவதற்காக மனுதாரரின் வழக்கறிஞர்கள் பொய்யான ஆவணங்களையும் ஜோடித்து நீதிமன்றத்தில் வழங்கியுள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தொடர்ந்து மேற்கொண்டதன் மூலமாக இந்த வழக்கை நடத்துவதற்கான வாய்ப்பை மனுதாரர் இழந்துவிட்டார். எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Udayasooriyan Editor

0 Reviews