வட்ஸ்அப் வதந்தியால் மெக்சிகோ அரசியல்வாதி அடித்துக் கொலை

குழந்தை ஒன்றை கடத்தியதாக சமூக ஊடகத்தில் வதந்தி பரவியதை அடுத்து மெக்சிகோ நாட்டு அரசியல் ஆலோசகர் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய மாநிலமான புவெப்லாவில் 31 வயதான டேனியல் பிகாசோ, சுமார் 200 பேர் கொண்ட கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பபட்லசோகோ நகருக்கு வந்த அவரை சுற்றிவளைத்திருக்கும் கும்பல் அவரை கொலை செய்த பின் உள்ளூர் பயிர் நிலம் ஒன்றுக்கு இழுத்துச் சென்று அவரது உடலுக்கு தீ வைத்துள்ளது. இது ஒரு காட்டு மிராண்டிச் செயல் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் “வட்ஸ்அப்” குழு ஒன்றிலேயே அவர் குழந்தை ஒன்றை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிகாசோ கடந்த மார்ச் மாதம் வரை மெக்சிகோ பாராளுமன்றத்தில் ஆலோசகர் ஒருவராக செயற்பட்டுள்ளார்.
கும்பல்களால் சட்டத்தை கையில் எடுக்கும் இவ்வாறான தாக்குதல்கள் மெக்சிகோவில் பொதுவான ஒன்றாக உள்ளது. இதே புவெப்லா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு ஏழு பேர் அடித்து உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.